மாண்புகளை எட்ட மனஉறுதி வேண்டும்

இந்தியாவின் பதினோராவது அதிபராக இருந்த   ஏபிஜே அப்துல் கலாம் இந்திய மக்களால் மட்டுமன்றி உலகின் பலநாட்டு மக்களாலும் பெரிதும் மதிக்கப்படுபவர்.

விஞ்ஞானம், கல்விநாட்டம், நாட்டுப்பற்று, முதலிய பல துறைகளில் ஈடுபட்டிருந்தாலும் நாட்டின் மாணவர்களும், இளையரும் நல்ல நிலையில் முன்னேற வேண்டும், முன்னிலை காணவேண்டும் என்பதில் அவர் எப்போதும் உறுதியாயிருந்தார். இளையர்களை ஊக்குவிக்கும் அரிய நூல்களை எழுதி முன்னணி வகித்துள்ளார் கலாம்.

தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் ஒரு சிறிய மீனவக் குடும்பத்தில் பிறந்தார். அவரின் குடும்பம் மரக்கலம் இயக்கியவர்கள் குடும்பம். ஆனால் கால ஓட்டத்தில் வறுமை தாண்டவமாடவே, பல துன்பங்களை அது சந்திக்க நேர்ந்தது. 

துன்பக்கடலைத் தாண்டி, அயரா முயற்சியின் காரணமாக கலாம் மேல்நிலை கண்டார். எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் தொடர் முயற்சி இருந்தால் மேல்நிலை காணமுடியும் என்பதற்கு கலாம் ஓர் எடுத்துக் காட்டு. அவர் ஆக்கபூர்வ சிந்தனையாளராக, கல்விநாட்ட மிக்கவராகத் திகழ்ந்தார். இந்தியாவின் அணுச்சோதனைகளிலும் விண்வெளிப் பயணங்களிலும் அறிவியல் சாதனைகளிலும் கலாமின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஒரு தவணைதான் அதிபராக இருந்தார் என்றாலும் பாரதிய ஜனதா கட்சியும் இந்திய தேசிய காங்கிரசுமே கருத்து வேறுபாடின்றி அவரை அதிபராகத் தேர்வு செய்திருந்ததையும் மறக்க முடியாது. 

நாடு முழுவதும் பயணம் செய்து, கல்வியின் நாட்டத்தை மாணவர்களிடையே பரப்பிய பெருமை அவருக்கு இருந்தது. தம்முடைய பதவிக்காலம் முடிந்த பின்னர், குடிமக்களில் ஒருவராக ஆனபோதிலும், பதவியில் இருந்தபோது, முன்னைய அதிபர்களுக்கும் இன்றைய அதிபர்களுக்கும் அரசாங்க கவனிப்பு இருக்கும் என்பதால், தம்முடைய சேமிப்புகளையும் சம்பளத்தையும் ஏழை மாணாக்கர்களின் கல்வி நிதிக்கு வழங்கிய பெருமை அவருக்கு உண்டு.  வேலையில் இருந்தபோது, இரண்டு நாள்கள் மட்டுமே அவர் விடுப்பில் இருந்துள்ளார். ஆம், தம் தந்தையார் இறந்தபோதும், தாயார் இறந்தபோதும் மட்டுமே விடுப்பு எடுத்தவர் கலாம்.

பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றுள்ள அப்துல் கலாம், மக்கள் அதிபராக, மக்கள் விஞ்ஞானியாக, மனிதநேயம் மிக்கவராக வாழ்ந்து காட்டிய பெருமைக்குரியவர். 

சிறுவர்களுக்கு அறிவியலையும் பொது அறிவையும் போதிப்பதில் தனி ஆர்வம் அவரிடமிருந்தது. அதனால் தான், அவர் தம்முடைய 83 ஆவது வயதில் ‌ஷில்லாங்கில், இந்திய நிர்வாகக் கழகத்தில் இளையரிடம் பாடம் போதித்துக்கொண்டிருந்தபோது, மயங்கி விழுந்து உயிர் இழந்தார். அவரின் மறைவுக்கு உலகமே அஞ்சலி செலுத்தியது. ராமேஸ்வரத்தில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் உலகத்  தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலாமின் நினைவாக ராமேஸ்வரத்தின் பேய்க்கரும்பு எனும் இடத்தில் கட்டப் பட்டுள்ள மணி மண்டபத்தை அண்மையில் திறந்து வைத் தார். 15 கோடி ரூபாய் (S$3.3 மில்லியன்) செலவில் கட்டப் பட்ட அந்த மணி மண்டபத்தில் கலாம் வீணை மீட்டுவது போன்ற அழகிய சிலை ஒன்றை சிற்பி செய்திருப்பது, பாராட்டப்படக்கூடிய வகையில் இருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.

கலாம், இன்று இல்லாமல் இருக்கலாம். ஆனால் உலகம் அவரின் சிறந்த பல தன்மைகளுக்காகவும் சேவைகளுக்காகவும் அவரைப் பாராட்டுகின்றது.  சமய நல்லிணக்கம், மற்றவர்க்கு முன் உதாரண வழிகாட்டியாக இருத்தல் முதலியவற்றில் கலாமை மக்கள் முன்னோடியாகக் கருதுவர். இந்திய அதிபர்களில் இளையரிடையே பெரும் மதிப்பைப் பெற்றுள்ள கலாமின் இரண்டாவது நினைவுநாள் இந்தியா வின் பல மாநிலங்களிலும் உலகின் பல நாடுகளிலும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. மன உறுதி இருந்தால், எந்தச் செயலையும் செய்துகாட்ட முடியுமென்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியிருப்பவர் திரு அப்துல் கலாம்.