புத்தாக்கத்தைப் புகுத்தும் ‘சங்கே முழங்கு’

காலத்திற்கேற்ற வகையில், சிந்திக்க வைக்கும் படைப்பாகத் திகழும் ‘சங்கே முழங்கு’ கலைநிகழ்ச்சி ‘குறைந்த பிறப்பு விகிதம்’, ‘செயற்கை நுண்ணறிவு’ ஆகிய இரு முக்கிய அண்மைக் காலத்து கருத்துகளை மைய மாகக் கொண்டு இவ்வாண்டு மேடையேற உள்ளது. ஈராண்டுகளுக்கு ஒரு முறை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தனது இருபதாம் ஆண்டு நிறைவை இம்முறை கொண்டாடுகிறது. நிகழ்ச்சியில் மட்டுமின்றி நிகழ்ச்சிக்கு முன்னர் நடைபெறும் தயாரிப்பின் போதும் பல புதிய கூறுகள் இவ்வாண்டு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.

முதல் முறையாக, சங்கே முழங்கின் தயாரிப்புக் குழுவில் தொழில்நுட்பக் கல்விக் கழக, பலதுறைத் தொழில்கல்லூரி மாணவர்களும் கலந்துகொண் டுள்ளனர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக மாணவர்கள் இவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஒரு கலை நிகழ்ச்சியைத் தயாரிப்பதன் வெவ்வேறு கூறுகளைக் கற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“இதன் மூலம் தொழில்நுட்பக் கல்விக் கழக, பலதுறைத் தொழில்கல்லூரி மாணவர்களும் தங்கள் பள்ளிகளில் மேலும் தரமான நிகழ்ச்சிகளை வருங்காலத்தில் உருவாக்கிப் படைக்கலாம்,” என்றார் சங்கே முழங்கின் தயாரிப்பாளர் ஹெஷ்வின் மாதவா, 24. இவ்வாண்டு நிகழ்ச்சியை முன்னிட்டு, ‘வில்லிங் ஹார்ட்ஸ்’ என்ற அரசுசாரா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழ்ப் பேரவை யின் சுமார் 80 உறுப்பினர்கள் உணவு தயாரிக்க உதவி புரிந்தனர்.