நடுவானில் சிக்கிக்கொண்ட பயணிகள் பத்திரமாக மீட்பு

ஜெர்மனியின் கொலோன் நகரில் ஓடும் ரைன் ஆற்றுக்கு மேலே, தாங்குதூணில் கம்பிவட ஊர்தி ஒன்று மோதியதால் நடுவானில் 75 பயணிகள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து, ஜெர்மானிய தீயணைப்பு வீரர்கள் துணிச்சலாகச் செயல்பட்டு பாரந்தூக்கி உதவியுடன் அந்தப் பயணிகளைப் பத்திரமாக மீட்டதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது. கம்பிவட ஊர்திகளில் இருந்த பயணிகள் ஒவ்வொருவராக கயிறு மூலம் ஆற்றின் மீது தயாராக நின்றிருந்த படகில் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. இருப்பினும், மீட்பு முயற்சியின்போது ஒரு கர்ப்பிணிக்கும் இன்னொரு பெண்ணுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டதாக ‘கார்டியன்’ செய்தி கூறுகிறது.

விபத்து நிகழ்ந்தபோது 32 கம்பிவட ஊர்திகள் பயணத்தில் இருந்ததாக பொதுப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். ஒட்டுமொத்த அமைப்பும் நிலைகுத்திப் போனதற்குக் காரணமாக அமைந்த அந்த விபத்து எதனால், எப்படி நிகழ்ந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. நடுவானில் சிக்கிக்கொண்டவர்களில் மார்ட்டினா=பீட்டர் ரீகர் தம்பதியர் முதலாவதாக மீட்கப்பட்டனர். அவர்கள் தங்களது 41வது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக கம்பிவட காரில் பயணம் செய்ததாகக் கூறினர். பதற்றப்படாமல் அமைதியாக இருக்குமாறு மீட்பு ஊழியர்கள் கை சைகைகள் மூலம் அறிவுறுத்தியதாக திரு ரீகர் குறிப்பிட்டார். “இந்தச் சம்பவம் என்றென்றும் எங்கள் நினைவில் இருக்கும்,” என்றும் அவர் சொன்னார்.

தாங்குதூண் மீது கம்பிவட ஊர்தி மோதியதில் யாருக்கும் காயமில்லை. மீட்பு நடவடிக்கையின் போது கர்ப்பிணி உட்பட இரு பெண்கள் லேசாகக் காயமடைந்தனர். படம்: ஏஎஃப்பி