அமைச்சர் லாரன்ஸ்: மணல் இறக்குமதிக்கு பாதிப்பு இல்லை

சிங்கப்பூரின் மணல் இறக்குமதிக்கு எந்த இடையூறும் வராத வண்ணம் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளன என தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார். சிங்கப்பூர் பல நாடுகளிலிருந்து மணலை இறக்கு மதி செய்கிறது என்றும் மணல் இறக்குமதி செய்ய மேலும் பல இடங்களைத் தேட இத்துறையில் உள்ளவர் களைத் தொடர்ந்து ஊக்குவிப்போம் என்றும் அமைச்சர் சுட்டினார்.

மேலும் கட்டுமானத்துறையில் மணல் அதிகம் பயன்படுத்துவதையும் நம்பியிருப்பதையும் தவிர்த்து மணல் குறைவாகத் தேவைப்படும் கட்டுமான உத்திகளைப் பயன்படுத்துமாறும் கட்டுமானத்துறையை ஊக்குவித்து வருவதாக அமைச்சர் கூறினார். மேலும் சிங்கப்பூரின் மணல் இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு வேறுபடும் என்று சுட்டிய அமைச்சர் கடந்த ஆண்டு மொத்தம் 35 மில்லியன் டன் எடை அளவு மணலைச் சிங்கப்பூர் இறக்குமதி செய்தது என்றார்.

 

சிங்கப்பூருக்கு மணல் ஏற்றுமதியை நிறுத்தவேண்டும் எனும் கம்போடியாவின் முடிவால் சிங்கப்பூருக்கு எற்பட்ட பாதிப்பு குறித்தும் எத்தனை நாடுகளிலிருந்து சிங்கப்பூர் மணல் இறக்குமதி செய்கிறது என்றும் மணல் இறக்குமதியின் அளவு குறித்தும் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரித்தம் சிங் நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.