தர்மன்: நோய்த் தடுப்பை அறிவது அவசியம்

முஹம்மது ஃபைரோஸ்

உடல்நலப் பரிசோதனை செய்து கொள்வதன் முக்கியத்துவத்தை பெரும்பாலானோர் உணர்ந்திருந் தாலும் பல நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளைப் பற்றியும் நோயைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பலர் அறிந்திருப்பதில்லை என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். எனவே, குறிப்பிட்ட காலத் துக்கு ஒருமுறை சுகாதாரப் பரி சோதனை செய்து மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம் என்றார் அவர். சிராங்கூன் சாலை, பிஜிபி அரங்கில் நேற்று நடந்த சுகாதார விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு தர்மன் செய்தியாளர்களிடம் பேசினார். “நீரிழிவு, பக்கவாதம் போன்ற நோய்கள் இந்திய சமூகத்தை அதிகம் பாதிப்பவையாக உள்ளன. இவை வராமல் தற்காக்க ஆரோக் கிய உணவு முறையைக் கடைப் பிடிப்பது அவசியம். “பாரம்பரிய இந்திய உணவில் எல்லாச் சத்துகளும் உண்டு. உணவில் காய்கறி, பழங்களை அதிகம் சேர்த்து, சர்க்கரையையும் சாதத்தையும் குறைத்தாலே போதும்,” என்றார் அவர்.

 

உடல்நலப் பரிசோதனை செய்துகொள்ள வந்திருந்தவர்களிடம் சுகாதாரப் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம். (வலக்கோடி) மீடியாகார்ப் இந்திய, மலாய் சமூகப் பிரிவின் தலைவர் டாக்டர் சித்ரா ராஜாராம். படம்: த.கவி