ஹிரோ‌ஷிமா மீது அணுகுண்டு தாக்குதல்: 72 ஆண்டுகள் ஆகிவிட்டன

தோக்கியோ: அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலால் ஜப்பானின் ஹிரோ‌ஷிமா நகரம் தரைமட்டமானது ஆகஸ்ட் 6ஆம் தேதிதான். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் இரண்டு அணுகுண்டு தாக்குதல்களால் ஜப்பான் நிலை குலைந்தது. 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோ‌ஷிமா மீது அமெரிக்கா முதல் அணுகுண்டை வீசித் தாக்கியதில் அந்நகரம் தரைமட்டானது. அத்தாக்குதலில் அந்நகரில் மட்டும் 140,000 பேர் கொல்லப்பட்டனர்.

அத்தாக்குதல் நடத்தப்பட்டு 72 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அதனால் ஏற்பட்ட துயரம் ஜப்பானிய மக்களின் மனதைவிட்டு இன்னும் நீங்கவில்லை. ஹிரோ‌ஷிமா தாக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு நாஹாசாகி நகரம் மற்றொரு அணுகுண்டு வீச்சால் தாக் கப்பட்டதில் அங்கு 74,000 பேர் உயிரிழந்தனர். 72வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்று ஹிரோ‌ஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே, அணுவாயுதமற்ற உலகமாக மாற்ற ஜப்பான் அதன் பங்கை ஆற்றும் என்று கூறினார்.

அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஹிரோ‌ஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் மக்கள் காத்திருக்கின்றனர். படம்: ஏஎஃப்பி