சாதனையை நெருங்கும் இந்தியா

கொழும்பு: இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிவிட் டால் போதும், தொடர்ந்து அதிக தொடர்களில் வென்ற அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா உடன் இந்திய கிரிக்கெட் அணி பகிர்ந்துகொள்ளும். இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-0 எனக் கைப்பற்றி, முன்னிலையில் இருக்கிறது. இதனுடன் சேர்த்து கடைசி யாகத் தான் பங்கேற்ற கடைசி எட்டு டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா வாகை சூடியிருக்கிறது. கடந்த 2005 முதல் 2008 வரை ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஒன்பது டெஸ்ட் தொடர்களில் வென்றதே இப்போதைய சாதனை. 2008ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கிண் ணத்தில் அந்நாட்டு அணியிடம் தோற்றதன் மூலம் பாண்டிங் படை யின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், இவ்வாண்டு நவம்பர்=டிசம்பர் மாதங்களில் சொந்த மண்ணில் இலங்கை அணிக்கெதிராக நடக்கவுள்ள டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும்பட்சத்தில் ஆஸ்திரேலிய அணியின் சாதனையை அது சமன் செய்துவிடும். இரண்டாவது டெஸ்ட் போட்டி யின் முதல் இன்னிங்சில் இருவர் சதமும் நால்வர் அரை சதமும் விளாச, இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 622 ஓட்டங் களை எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. அடுத்து பந்தடித்த இலங்கை அணி 183 ஓட்டங்களுக்குச் சுருண்டு ‘ஃபாலோ ஆன்’ பெற் றது.

கருணரத்னே (141), குசல் மெண்டிஸ் (110) என இருவர் சதமடிக்க, இரண்டாவது இன்னிங் சில் சற்றுத் தாக்குப் பிடித்தது இலங்கை அணி. ஆயினும் அந்த அணியால் தோல்வியின் பிடியில் இருந்து தப்ப இயலவில்லை. அதிரடியாகப் பந்தடித்து 70 ஓட்டங்களைக் குவித்ததுடன் முதல் இன்னிங்சில் இரண்டு, 2வது இன்னிங்சில் ஐந்து என மொத்தம் ஏழு விக்கெட்டுகளை அள்ளிய ஜடேஜா ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.