கதிராமங்கலம்: பேராசிரியர் ஜெயராமனுக்குப் பிணை

மதுரை: கதிராமங்கலம் போராட் டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு (படம்) நிபந்தனை யுடன் கூடிய பிணை வழங்கி உள்ளது மதுரை உயர் நீதிமன்றம். தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தில் விவசாய நிலங்களை அழித்து ஓஎன்ஜிசி நிறுவனத் தின் மீத்தேன் எடுக்கும் திட்டத் துக்கு எதிராகவும் காவல்துறை அடக்குமுறையைக் கண்டித்தும் போராட்டங்களை நடத்தி வந்த பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரைக் கைது செய்து சிறை யில் அடைத்தது தமிழக அரசு. அவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதை அரசியல் கட்சித் தலை வர்களும் பல்வேறு சமூக அமைப்பு களும் கண்டித்து வந்தன. ஓஎன்ஜிசி பொருள்களைச் சேதப்படுத்தியதாகத் தொடரப் பட்ட வழக்கில், ஏற்கெனவே ஜெய ராமனுக்கு பிணை வழங்கப்பட்டு இருந்தது. ஆனாலும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் தஞ்சை நீதிமன்றம் பலமுறை பிணை மறுத்ததால் அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாமல் இருந்தது. எனவே, இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை யில் பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பேராசிரியர் ஜெய ராமன் உட்பட எட்டுப் பேருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கி உள்ளது. மற்றவர்களுக்கு திருச்சி நீதிமன்றத்தில் தினமும் முன்னி லையாக உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், பேராசிரியர் ஜெய ராமனுக்கு மட்டும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தினமும் முன்னிலையாகிக் கையெழுத் திட உத்தரவிட்டுள்ளது.