சுமத்ராவில் நிலநடுக்கம் சிங்கப்பூரில் அதிர்வுகள்

இந்தோனீசியாவின் மேற்கு சுமத்ரா தீவிற்கு அருகே நேற்று காலை சிங்கப்பூர் நேரப்படி 11.08 மணி அளவில் 6.5 ரிக்டர் நிலநடுக்கம் நிகழ்ந்தது. அதனுடைய விளைவுகள் சிங்கப் பூரில் உணரப்பட்டன. இங்கு கட்டடங்களில் அதிர்வு களைத் தாங்கள் உணர்ந்ததாக பலரும் டுவிட்டரில் தெரிவித்தனர். நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என்றும் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு ஓடியதாகவும் செய்திகள் தெரிவித்தன. கடலில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் நிகழ்ந்த அந்த நிலநடுக்கம் காரணமாக உயிருடற்சேதம் ஏற்பட்டதாக உடனடியாகத் தகவல் இல்லை. சுமத்ரா தீவின் பெங்குலு நகருக்கு மேற்கே 73 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு கீழே நிலம் நடுங்கியதாக அமெரிக்கா வின் புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.

“நிலநடுக்கம் கடுமையாக இருந்தது. மேற்கு சுமத்ராவில் இருக்கும் பாடான் வரை அதன் அதிர்வுகள் உணரப்பட்டன. இருந்தாலும் சுனாமி ஆபத்து இல்லை,” என இந்தோனீசியாவின் புவியியல், வானிலை அமைப்பின் அதிகாரியான ரியாடி கூறினார். உயிருடற்சேதம், கட்டடச் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றி அதிகாரிகள் பரிசோதனை நடத்திவருவதாகவும் அவர் தெரி வித்தார். இதற்கிடையே, சிங்கப்பூரில் தாங்கள் அதிர்வுகளை உணர்ந்த தாக பலரும் டுவிட்டரில் தெரிவித் தனர். சிங்கப்பூர் கட்டடங்களின் உள்வடிவமைப்பு வலுவாக உள்ளன என்றும் அதனால் அவை பாதுகாப்புமிக்கவை என்றும் சிங்கப்பூர் கட்டட, கட்டு மான ஆணையம் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் தெரிவித்தது.