ஜோகூர் இளவரசிக்கு கோலாகல திருமணம்

ஜோகூர்பாரு: ஜோகூர் சுல்தானின் மகள் இளவரசி துங்கு துன் அமினா மைமுனா இஸ்கண்டரியாவுக் கும் டச்சுக்காரரான டெனிஸ் முகம்மட் அப்துல்லாவுக்கும் நேற்று திருமணம் சிறப்பாக நடந்தது. அரச குடும்பத்தின் அதிகாரத் துவ இல்லமான இஸ்தானா புக்கிட் செரினில் அவர்களின் திருமணம் மலாய் பாரம்பரிய முறைப்படி நடந்தது. மலாய் பாரம்பரிய உடை அணிந்திருந்த திரு டெனிஸ் முகம்மட், ஜோகூர் முஃப்தி முகம்மட் தாரிர் ஷம்சுதின் முன்னிலையில் இளவரசி துங்கு அமினாவுடனான திருமணத்தை உறுதி செய்தார். இந்தத் திருமண வைபவத்தில் ஜோகூர் சுல்தான் இப்ராஹிம், இளவரசியின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

டெனிஸ் முகம்மட் சார்பில் அவரது பெற்றோர்களான மார்ட்டின் மற்றும் ஹென்ரியேட் வெர்பாஸ், சகோதரர், சகோதரி மற்றும் நண்பர்கள் ஆகியோர் நெதர்லாந்திலிருந்து வருகை புரிந்தனர். சிங்கப்பூர் அரசாங்கத்தை பிரதிநிதித்து துணைப் பிரதமர் டியோ சி ஹியன், ஜோகூர் இள வரசியின் திருமண வைபவத்தில் கலந்துகொண்டார். திருமணத் தம்பதியர் மோதிரம் மாற்றிக்கொள்ளும் சடங்கு அரண்மனையின் முதல் மாடி யிலுள்ள சிறப்பு அறையில் நடை பெற்றது. திரு டெனிஸ் முகம்மட் 22.50 மில்லியன் ரிங்கிட் தொகையை துங்கு அமினா விற்கு வரதட்சணையாகக் கொடுத்தார். பின்னர் புதுமணத் தம்பதியினர் தங்களின் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டனர். இருவரின் குடும்பத்தினரும் தங்களின் பரிசுப் பொருட்களை பின்னர் மாற்றிக்கொண்டனர்.

மணப்பெண்ணான ஜோகூர் இளவரசிக்கு திரு டெனிஸ் முகம்மட் மோதிரம் அணிவிக்கிறார். படம்: ஏஎஃப்பி