திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக வித்யா பாலன்

மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் நடிகை வித்யாபாலன். இந்தப் பொறுப்பை ஏற்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு நடிகை என்ற வகையில் இந்தியத் திரையுலகை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல பாடுபடுவதே தமது குறிக்கோள் என்றும் வித்யா கூறியுள்ளார். தற்போது ‘தும்ஹாரிசுலு’ என்ற படத்தில் நடித்து வரும் அவர், நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தணிக்கைக் குழு உறுப்பினர் என்ற முறையில் தமது பொறுப்புகளைத் திறமையாக நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். “தற்போது நமது சினிமா சமுதாயத்தின் உணர்வுகள், யதார்த்தங்கள், பிரச்சினைகளைப் பேசி வருகிறது. இதனை முன்னேற்றமான புதிய பாதைக்கு எடுத்துச் செல்ல பாடுபடுவேன். “இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எனது பணிக் காலத்தின்போது தொடர்ந்து கச்சிதமாக மேற்கொள்வேன். இந்தப் புதிய பொறுப்பு எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார் வித்யாபாலன்.