இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கல்வீச்சு மோதல்

டோக்லாம் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே பதற்றம் நிலவி வரும் வேளையில் காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயினும், சீனப் படையினரின் இரு ஊடுருவல் முயற்சிகளை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். கிழக்கு லடாக் பகுதியில் உள்ள பாங்காங் ஏரியின் வடகரை ஓரமாக நேற்று முன்தினம் காலையில் இந்திய, சீன ராணுவத்தினரிடையே சிறிய அளவில் மோதல் வெடித்தது. இரு நாட்டுப் படையினரும் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதில் இரு தரப்பிலும் சிலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப் பட்டது. “இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்ற சீன ராணுவத்தினரை இந்தியப் படையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவர்களுக்குள் மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவரை நோக்கி ஒருவர் மாறி மாறி கற்களை வீசி எறிந்ததில் சிலருக்குச் சிறிய அளவில் காயமேற்பட்டது,” என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறின. இதனிடையே, இந்தக் கல்வீச்சு சம்பவம் குறித்து எதுவும் தெரியாது என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹு சுன்யிங் தெரிவித்து உள்ளார். அத்துடன், சீன ராணுவத்தினர் தங்களது எல்லையில் இருந்துதான் காவல் காத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.