ராஜ்நாத் நம்பிக்கை: சீனா அமைதித் தீர்வு காண முற்படும்

புதுடெல்லி: சிக்கிம் மாநில எல்லையான டோக்லாம் பகுதியில் இந்திய, சீனப் படைகளுக்கு இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு சாதகமான தீர்வு காண சீனா விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டபோது இவ்வாறு அவர் பேசினார். இதன்மூலம், இந்தியா அமைதியை மட்டுமே விரும்புகிறது என்பதே உலக நாடுகளுக்கு நாம் விடுக்கும் செய்தி என்று குறிப்பிட்ட அவர், இந்திய எல்லைகளைப் பாது காக்கத் தேவையான பலம் நமது படைகளிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே, இந்தியா எதிர்பாராத நேரத்தில் அதன்மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் தாக்குதல் ஒத்திகையை சீனா பார்த்துள்ளதாக சீன அதிகாரபூர்வ ஊடகங்கள் தெரிவித்ததாக குளோபல் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டது.

அந்தச் சோதனைகளில் ஆகாயப்படை, பீரங்கிப்படை போன்றவை ஈடுபடுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயிற்சியைக் காட்டும் 5 நிமிட காணொளி ஒன்றும் சீன உள்ளூர் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அந்தக் காணொளி யில் இந்தியா பற்றி ஏதும் குறிப் பிடப்படவில்லை. மூன்று மாதங் களாக பாதுகாப்புப் பயிற்சிகள் மேற்கொண்டுள்ளதாக அதில் கூறப்பட்டது. சென்ற வாரத்தில் இந்தியாவை கிண்டல் செய்யும் விதத்தில் சீனா காணொளி ஒன்றை இணையத்தில் வெளியிட்டது. அது பலரது கண்டனத்தையும் பெற்றது. இதற்கிடையே, இந்தியா, சீனா வின் பழமை, கலாசாரம் போன்ற வற்றை ஒப்பிட்டு காணொளி ஒன்றை அண்மையில் வெளியிட்ட துடன் அதில் டோக்லாமில் சாலை அமைக்கும் சீனாவுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் இந்தியப் படைகள் ஊடுருவி இருப்பதாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளின்றி இந்திய ராணுவம் டோக்லாம் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் இந்தியா அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தக் காணொளியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.