பதவி கிடைக்காததால் அணி மாற மாட்டேன்: செம்மலை

சென்னை: அமைச்சர் பதவி கிடைக்காததில் தமக்கு அதிருப்தி ஏதும் இல்லை என செம்மலை எம்எல்ஏ தெரிவித்துள்ளார். அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்குப் பிறகு தமக்கு அமைச்சர் பதவியை எதிர்பார்த்ததாகவும் அவ்வாறு கிடைக்காததால் செம்மலை அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் பதவி கிடைக்காததால் தாம் தினகரன் அணிக்கு மாறப் போவதாக வெளியான தகவலைத் திட்டவட்டமாக மறுத்தார். “அமைச்சர் பதவி கிடைக்காததில் வருத்தம் உள்ளது. என்னை நம்பி வந்த ஆதரவாளர்கள் எனக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத ஆதங்கத்தில் சில கருத்துகளை ஊடகங்களிடம் பதிவு செய்து இருக்கலாம். அவர்கள் அதிருப்தியில் இதைச் செய்திருக்கலாம். எனினும் நான் அணி மாற மாட்டேன்,” என்றார் செம்மலை.