துடிதுடித்துப்போன அமலா

தனது தந்தைக்கு உடல்நலம் குன்றி யிருப்பதாகக் கிடைத்த தகவலால் துடித்துப் போயிருக்கிறார் நடிகை அமலா பால். ஏனெனில் அவரது கைபேசியில் இந்தத் தகவலை அனுப்பியது அவரது தாய். ஆனால் அது பொய்யான தகவல் என்பதுதான் விஷயம். எதற்காக அமலா வின் தாய் இப்படிச் செய்தார் என்பது தெரிய வந்துள்ளது. சுசிகணேசன் இயக்கத்தில் ‘திருட்டுப் பயலே’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மை யில் தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் அமலா பாலும் பங்கேற்றார். அப்போது நடந்த சம்பவங்களை சுசிகணேசன் விவரித்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பேங்காக் கின் உட்பகுதியில் படப்பிடிப்பு நடந்ததாம். அது மலையும் கடலும் சார்ந்த பகுதியாகும். அங்கு கைபேசித் தொடர்புகள் சரியாக இருக்காதாம். படப்பிடிப்பு நடந்துகொண் டிருந்தபோது அமலா பாலின் கைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், அவரது தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட் டிருந்தது.

இதனால் துடிதுடித்துப்போன அமலா பால், படக் குழுவினரிடம் சொல்லாமலேயே நாடு திரும்ப முடிவு செய்திருக்கிறார். “இதையறிந்தபோது நாங்களும் அதிர்ச்சி அடைந்தோம். அமலா பாலிடம் பேசியபோது, கைபேசி இணைப்பு சரியாக இல்லாததால் சிக்னல் இருக்கும் இடத்துக்குச் சென்று தன் தாயைத் தொடர்புகொண்டு பேசுவதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் படப்பிடிப்புக்குத் திரும்புவதாகக் கூறி படகில் ஏறிச் செல்ல முற்பட்டார். “இதையடுத்து நாங்களும் அவருடன் வருவதாகக் கூறி நானும் பாபி சிம்ஹா, பிரசன்னா ஆகியோரும் படகில் ஏறிக் கொண்டோம். கைபேசி சிக்னல் கிடைத்த இடத்தில் இருந்து அவர் தன் தாயைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பல நாட்கள் அமலாவைத் தொடர்புகொள்ள இயலாததால் வேண்டும் என்றே இவ்வாறு ஒரு பொய்த் தகவல் அனுப்பியதாக அவரது தாய் தெரிவித்தார். இதற்காக தன் தாயை வெகுவாகக் கடிந்து கொண்டார் அமலா பால். அதன் பின்னர் சமாதானம் அடைந்து எங்களுடன் படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்றார்,” என்கிறார் இயக்குநர் சுசிகணேசன்.