டிரம்ப்: எனது அணுகுமுறை பலன் தர தொ டங்கியிருக்கிறது

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரிய விவகாரத்தில் தனது புதிய அணுகுமுறை பலன் அளிக்கத் தொடங்கியிருப்பதாகக் கூறியுள் ளார். வடகொரியா தொடர்ந்து அதன் நவீன ஏவுகணைத் திட்டத்தை மேம்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளபோதிலும் வட கொரியா பற்றி திரு டிரம்ப் ஆகக் கடைசியாகக் கூறிய கருத்து, வட கொரியாவின் அணுவாயுதத் திட்டம் தொடர்பில் அந்நாட்டுடன் டிரம்ப் நிர்வாகம் பேச்சுநடத்த விரும்புவதையே புலப்படுத்துகிறது என்பது அரசியல் ஆர்வலர்களின் கருத்து. வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அமெரிக்காவை மதிக்கத் தொடங்கியிருப்பதாக திரு டிரம்ப் கூறியுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் போக்கில் ஒருவேளை சாதகமான மாற்றம் உருவாகலாம் என நம்புவதாகவும் அவர் தெரி வித்தார்.

அரிசோனாவின் ஃபோனிக்ஸ் நகரில் நடந்த பேரணியில் உரை யாற்றிய திரு டிரம்ப், வடகொரிய விவகாரத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் ஏற்படும் என நம்புவதாகத் தெரிவித்தார். முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், வடகொரியா மீது ஐநா பாதுகாப்பு மன்றம் புதிய தடைகள் விதித்த பிறகு அந்நாடு சினமூட்டும் செயலில் ஈடுபட வில்லை என்று கூறினார்.