You are here

காற்பந்து எதிர்காலம் இளையர்களின் கால்களில்

சிங்கப்பூர் காற்பந்துக்கு இது போதாத காலம். அனைத்துலக அரங்கில் கடந்த ஓராண்டில் சிங்கப்பூர் தேசிய குழு 13 ஆட்டங்களில் விளையாடியுள்ளபோதும் அதில் ஒன்றில்கூட வெற்றியை ஈட்டவில்லை. அனைத்துலக அளவில் மட்டுமின்றி எஸ்-லீக் போன்ற முக்கிய உள்ளூர் போட்டிகளிலும் சிங்கப்பூர் குழுக்களால் சாதிக்க முடியவில்லை. இதில் 2016, 2017 எனத் தொடர்ந்து இரு ஆண்டுகளாக ஜப்பானிய குழுவான அல்பிரெக்ஸ் நிகாட்டாவின் கையே ஓங்கி இருக்கிறது.

ஆசியான் காற்பந்து சம்மேளனத்தால் ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் சுசுகி கிண்ணத்தை 2012ல் வென்றதே கடைசியாக சிங்கப்பூர் குழுவுக்குக் கிட்டிய மிகப் பெரிய வெற்றி.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் உலகத் தர வரிசையில் 73ஆம் இடத்தைப் பிடித்திருந்த தேசியக் குழு இன்று நூறு இடங்கள் பின்தங்கி, பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

சிங்கப்பூரர்கள் அதிகம் நேசிக்கும் விளையாட்டாக இருந்தபோதிலும் இந்த நிலை ஏற்பட்டிருப்பது கவலைக் குரிய விஷயம். இதை எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு, பின்னடைவைத் தடுத்து முன்னேற்றத்திற் கான நடவடிக்கைகளை எடுக்க இனியும் நாம் தாமதிக்கக்கூடாது. மூத்த வீரர்களுக்கு ஓய்வளித்து குழுவிற்கு இளம் ரத்தத்தைப் பாய்ச்சவும் இதுவே சரியான தருணம்.

இதை சிங்கப்பூர் காற்பந்துச் சங்கமும் உணர்ந்து உள்ளது. அதனால்தான் ‘பருவத்தே பயிர் செய்’ எனும் முதுமொழிக்கு ஏற்ப, பள்ளிகளில் இருந்தே காற்பந்து மீதான ஆர்வத்தை விதைத்து, அதை ஊக்கமுடன் வளர்த்து, செழித்தோங்கச் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளது. இது நிச்சயம் வரவேற்கப்படவேண்டிய முயற்சி.

சங்கத்தின் முயற்சிக்கு பள்ளிகளும் கைகொடுக்க வேண்டியது அவசியம். தற்போது பாதிக்கும் குறைவான தொடக்கப் பள்ளிகளிலும் பாதிக்கும் சற்று அதிகமான உயர்நிலைப் பள்ளிகளிலும்தான் காற்பந்து ஓர் இணைப் பாட நடவடிக்கையாக இருக்கிறது என்பது அதிர்ச்சித் தகவல். நிச்சயமாக எல்லாப் பள்ளிகளிலும் காற்பந்தை ஓர் இணைப்பாட நடவடிக்கையாகத் தேர்வு செய்ய மாணவர்களுக்கு வாய்ப்புக் கிட்டவேண்டும்.

எஸ்-லீக் போட்டிகளில் 23 வயதுக்குட்பட்ட இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் வகையில் காற்பந்துச் சங்கம் புதிய மாற்றங்களைச் செய்யவிருக் கிறது. திறமையான வீரர்களை அடையாளம் காணவும் அவர்களுக்குத் திடலில் அதிக வாய்ப்பளிக்கவும் அந்த மாற்றங்கள் உதவும். அத்துடன், பதின்ம வயதிலேயே காற்பந்துத் திறனாளர்களை அடையாளம் கண்டு அவர் களின் திறனை மெருகூட்டுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் உடனடி பலன் கிட்டாவிடி னும் நீண்டகால நோக்கில் நற்பலன் கிடைப்பது உறுதி.

அதோடு, காற்பந்து ஆட்டக்காரராக சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்த திரு சுந்தரமூர்த்தி ஒரு திறமையான பயிற்றுவிப்பாளர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவரது பயிற்சியின்கீழ் லயன்ஸ்XII குழு, மலேசிய சூப்பர் லீக்கில் அடியெடுத்து வைத்த இரண் டாவது ஆண்டிலேயே அப்பட்டத்தை வென்றது நினைவு கூரத்தக்கது. இந்த நெருக்கடியான தருணத்தில் அவ ருக்கு அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டும். ஐரோப்பிய லீக் ஆட்டங்களை விரும்பிப் பார்க்கும் சிங்கப்பூர் காற்பந்து ரசிகர்கள், உள்ளூர் ஆட்டக்காரர் களுக்கும் ஆதரவளித்து, ஊக்குவிக்கும் விதமாக ஆட்டங்களை நேரில் காண அதிக எண்ணிக்கையில் திரளவேண்டும். அதேபோல, அனைத்துலக அளவிலும் தேசிய அளவிலும் காற்பந்தில் மிளிர்வோரின் வாழ்வு வளமாக அமையும் என்பதைக் காற்பந்துச் சங்கமும் உறுதிப்படுத்த வேண்டும்.

அறிவார்ந்த தேசத்தை அமைக்க ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ போன்ற எதிர்கால நோக்கிலான திட்டங்களை அரசாங் கம் செயற்படுத்திவரும் நிலையில் விளையாட்டிலும் சிங்கப்பூர் வெற்றிகரமான நாடாக வலம்வர முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும். வெறும் 330,000 மக்கள்தொகை யைக் கொண்ட ஐஸ்லாந்தாலேயே உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தகுதிபெற முடியும் எனில், உலக அரங்கில் வெற்றிகரமான, ஆற்றல்மிக்க நாடாக வலம் வரும் சிங்கப்பூரால் காற்பந்தில் அதைவிட அதிகமாக சாதிக்க முடியும் என்று உறுதியாக நம்புவோம்!