You are here

பெண்கள் உயர்ந்தால் சமூகம் உயரும்

கல்வித் தகுதி, நல்ல சம்பளத்துடன் நல்ல வேலை, வசதியான வாழ்க்கை. இவை மட்டுமே வாழ்க்கை என்று இருந்துவிடக்கூடாது. பெண்கள் அதற்கு மேலும் உயர வேண்டும் என்பது உலக அழகியாக அண்மையில் மகுடம் சூடிய குமாரி மானு‌ஷி சில்லரின் கருத்து. பிறக்கப்போகும் குழந்தை பெண் குழந்தை என்று தெரிந்தால், அந்தச் சிசுவை பிறக்கும் முன் கொன்று விடும் பழக்கமுள்ள ஹரியானாவில் பிறந்தவர் மானு‌ஷி. பெண்களுக்கு மதிப்பளிக்காத, இந்தியாவில் மிக மோசமான பாலியல் குற்றங்களுக்குப் பெயர் பெற்றுள்ள ஹரியானா மாநிலத்தில் பிறந்த ஒருவர், உலகம் போற்றும் அளவுக்கு உயர்வைப் பெற்றுள்ளது சாதாரண விஷயமல்ல.

அவர் வசதியான குடும்பத்தில், படித்த பெற்றோருக்குப் பிறந்தவர் என்றாலும் அவர் வளர்ந்த சமூகத்தில் முற் போக்கான பார்வையுடன் முன்னேறிச் செல்வது எளிது அல்ல. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை மானு‌ஷி. தன்னை மேம்படுத்தி, அதன்மூலம் தனது சமூகத்தை மேம்படுத்துவதில் முழு உறுதி கொண்டு உள்ளார். ஹரியானாவின் சோனிபெட் மாவட்டத்தில் மருத் துவம் படித்து வரும் மானு‌ஷி, இதயம் தொடர்பான மருத்துவத்தில் நிபுணத்துவம் பெறவிருக்கிறார். இவரது இலக்கு இந்தியாவின் கிராமப்புறங்களில் லாபநோக்க மற்ற மருத்துவமனைகளை நிறுவுவது.

அவருக்கு மிகவும் பிடித்தமான அலங்காரக் கலை யிலும் அழகியல் கலையிலும் கவனம் செலுத்துகிறார். அவற்றில் ஆர்வம் உள்ள பெண்களுக்கும் வழிகாட்டு கிறார். கவிதை எழுதுகிறார், ஓவியம் தீட்டுகிறார், நடனம் ஆடுகிறார். அழகுடன் அவரின் அறிவாற்றல், வாழ்க்கை குறித்த பார்வை எல்லாமேதான் அவருக்கு உலக அழகி பட்டத்தைப் பெற்றுத் தந்தது. கல்வியிலும் மற்ற பல துறைகளிலும் தனது திறனை வளர்ப்பதுடன் நின்றுவிடாமல் சாதிக்கத் துடிக்கும் மானு‌ஷியை சிங்கப்பூர் இந்தியப் பெண்கள் முன்னு தாரணமாகக் கொள்ளவேண்டும். ஹாரியான போன்ற மாநிலத்தில் பிறந்து, இந்தியா வின் மில்லியன் கணக்கான மக்களுடன் போட்டி போட்டு, உலக அளவில் மானு‌ஷி வெற்றிபெற்றுள்ளார்.

எல்லா வசதிகளும் உரிமைகளும் இன, சமய, மொழி, பாலினப் பேதங்கள் எதுவுமே இன்றி வழங்கும் சிங்கப்பூரில், தகுதிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் நாட்டில் பெண்கள் நிச்சயம் பல சாதனைகளைப் படைக்க முடியும். ஒவ்வொரு பெண்ணும் படிப்பு, வேலை, வசதியான வாழ்க்கை என்பதற்கும் அப்பால் தங்களை உயர்த்திக்கொள்வது பற்றிச் சிந்திக்கவேண்டும். போதுமென்ற மனத்துடன் இருந்துவிடாது, ஒவ் வொரு நிலையிலும் தன்னை உயர்த்திக்கொண்டே இருக்கவேண்டும். சாதனைகள் புரியவேண்டும். பெரும் பொருளீட்டுவதும் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதுமல்ல சாதனை.

தொழில், கலை, இலக்கியம், விளையாட்டு, சேவை, சமூக ஈடுபாடு என ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்கவேண்டும். தனிமனிதரின் உயர்வினால் சமூகம் சிறக்கும். சமூகத்தின் உயர்வு நாட்டை உயர்த்தும். இந்திய வெளியறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வான்வெளி வீராங்கனை மறைந்த கல்பனா சாவ்லா, உலக விருதுகளை வென்ற மல்யுத்த வீராங்கனைகள் பபிதா போகாட், கீதா போகாட் சகோதரிகள், ஷாக்ஸி மாலிக் போன்றவர்கள், எவரெஸ்ட் சிகரத்தை இருமுறை தொட்ட முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பைப் பெற்ற சந்தோஷ் யாதவ், வெற்றிகளைக் குவித்து வரும் இந்திய பெண்கள் ஹாக்கிக் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள், புகழ்பெற்ற இந்திய நடிகை ஜூகி சாவ்லா என ஹரியான மாநிலத்தில் பிறந்து சாதனை படைத்த பெண்களின் பட்டியல் நீளமானது. பெண் சிசுக்கொலையினால் இன்று வரையில் இந்தியாவில் பெண்கள் எண்ணிக்கை மிகக் குறைந்த மாநிலமாக ஹரியானா விளங்குகிறது. கடந்த ஆண்டு புள்ளிவிவரப்படி 1,000 ஆண்களுக்கு 850 பெண்களே இங்கு உள்ளனர்.

என்றாலும், மானு‌ஷி, கல்பனா, சுஷ்மா, போன்ற பல பெண்களின் உயர்வினால் ஹரியானாவும் இந்தியாவும் உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளன. அவற்றின் மதிப்பும் மரியாதையும் உயர்ந்துள்ளன. சிறிய தொகையினராக இருந்தாலும் சிங்கப்பூரின் இந்தியப் பெண்களும் தங்களது உயர்வினால் இந்திய சமூகத்தின், நாட்டின் மதிப்பை உயர்த்த முடியும்.