ஒரே படத்தின் மூலம் தமிழ்த் திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் 'அருவி' நாயகி அதிதி பாலன். இது இவரது அறிமுகப் படம் என்பதுதான் திரை விமர்சகர்களை புருவம் உயர்த்த வைத்துள்ளது. சிறப்பான நடிப்பு என்பதுடன் நின்று விடாமல், இப்படத்துக்காக தன் உடலை வருத்தி உழைப்பைக் கொட்டி உள்ளார் இந்த இளம் நாயகி. எனவே இப்படமும் இவரும் ரஜினிகாந்த் தொடங்கி பல்வேறு பிரபலங்களின் பாராட்டுகளைப் பெற்றுக் குவித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அதிதி பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இவரது தந்தை நெல்லையைச் சேர்ந்தவர். தாயாருக்கு பூர்வீகம் கேரளா. "உடனே நீங்கள் மலையாளியா என்று கேட்கவேண்டாம். அம்மாவுடையது கேரளாவில் குடியேறிவிட்ட தமிழ்க் குடும்பம். எனக்கு ஓர் அண்ணன் இருக்கிறார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். "சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்ததும் பெங்களூரில் சட்டம் படிக்க ரயில் ஏறினேன். ஒரு நல்ல நாள் பார்த்து 'கனம் நீதிபதி அவர்களே' என்று வாதாடுவதற்கு வசதியாக வழக் கறிஞர் மன்றத்தில் உறுப்பினராகவும் எனது பெயரைப் பதிவு செய்தேன்.
"தொடர்ந்து படிப்பு, படிப்பு என்று ஓடிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து என் உள்மனது கொஞ்சம் ஓய்வு எடுக்கக் கூடாதா என்று சொன்னது. ஏனெனில் வழக்கறிஞர் தொழிலுக்கு வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருக்கவேண்டும். அதனால் என் மனம் சொன்னபடி சற்று ஓய்வெடுத்தேன்," என்கிறார் அதிதி. அச்சமயம் பள்ளிக் கால நண்பர் ஒருவர் நடத்திய மேடை நிகழ்வில் கலந்து கொண்டாராம். பிறகு அந்த நண்பரின் பயிற்சிப் பட்டறையிலும் பங்கேற்றுள்ளார். அங்கு அறிமுகமானவர்கள் மூலம் கிடைத்தது தான் 'அருவி' பட வாய்ப்பாம்.
முதல் பட அனுபவம் எப்படி? "முன்னே பின்னே கேமரா முன்பு நின்ற அனுபவம் இல்லாததால் முதன்முதலாக கேமரா முன் நின்றபோது கொஞ்சம் பயமாகவும் கூச்சமாக வும் இருந்தது. நடிப்பைப் பொறுத்தவரை 'அருவி' படக்குழு மூன்று மாதங்கள் பயிற்சிப் பட்டறை நடத்தி, கதைக்கு ஏற்ற மாதிரி என்னை தயார் படுத்தியது. "முன்பே ஒத்திகை நடந்ததால் படக்குழுவில் இருந்த எல்லோராலும் சகஜமாகப் பழகவும் நடிக்க வும் முடிந்தது. "படக்குழுவில் எல்லோருமே இளையர்கள் என்பதால் எந்தவித வீண் சுபாவ மோதல்களும் இல்லாமல் வேலை பார்க்க முடிந்தது. படப்பிடிப்பை குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்ததுபோல் உணர்ந்தேன்," என்கிறார் அதிதி பாலன்.