யங்கூன்: பங்ளாதேஷில் தஞ்சம் அடைந்துள்ள ஆயிரக்கணக்கான ரோஹிங்யா அகதிகளை மியன் மாருக்கு திருப்பி அனுப்புவது தொடர்பில் பங்ளாதேஷில் பேச்சு வார்த்தை நடந்ததாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து அந்நாட்டு ராணுவம் ரோஹிங்யா போராளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.
அங்கு நீடித்த சண்டைக்குப் பயந்து ரோஹிங்யா மக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சுமார் 655,000 பேர் பக்கத்து நாடான பங்ளாதேஷில் தஞ்சம் புகுந்தனர். அதிகமான எண்ணிக்கையில் அகதிகள் வந்ததால் அப்பிரச்சினையை சமாளிக்க பங்ளாதேஷ் மிகுந்த சிரமப்பட்ட நிலையில் ரோஹிங்யா அகதிகளை மியன்மார் திரும்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தின. அதனைத் தொடர்ந்து அகதிகள் மியன்மார் திரும்புவதற்கு மியன்மார் அரசாங்கம் ஒப்புக்கொண்டது. ஆனால் அதற்கு முன்பாக சில விஷயங்கள் குறித்து பங்ளாதேஷ் அதிகாரிகளுடன் பேச்சுநடத்த வேண்டும் என்று மியன்மார் அதிகாரிகள் கூறினர்.