You are here

ஆசியான்-இந்தியா இரண்டும் சேர்ந்து செழிக்க சிறந்த வாய்ப்பு

தெற்காசியாவில் அமைந்திருக்கும் இந்தியா வும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளின் 10 நாடுகளும் தங்களுக்கிடையே பலதுறை உறவுகளை இன்னும் அணுக்கமாக்கி மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதை மிக முக்கிய மான ஒன்றாக இப்போது கருதுகின்றன.

இந்தியா-ஆசியான் உறவின் வெள்ளி விழாவைக் குறிக்கும் வகையில் புதுடெல்லி யில் ஆசியானின் 10 நாடுகளின் தலைவர்களு டன் இந்தியா உச்சநிலை மாநாடு நடத்தி பல துறைகளில் இணக்கம் கண்டதும், இந்தியா வின் 69வது குடியரசு தின கொண்டாட்டத்தில் ஆசியான் தலைவர்கள் சிறப்பு விருந்தினர் களாகக் கலந்துகொண்டதும் இதை பளிச் சென்று எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. உலக மக்களில் கால்வாசிபேர்-அதாவது மொத்தம் 1.8 பில்லியன் மக்கள் இந்தியா- ஆசியான் நாடுகளில் வசிக்கிறார்கள். இந்த இரண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி US$4.5 டிரில்லியனாக இருக்கிறது. வரும் 2025ல் இந்தியாவின் பயனீட்டாளர் சந்தை உலகின் ஐந்தாவது ஆகப்பெரிய சந்தையாக இருக்கும் என்பது மதிப்பீடு.

அதேவேளையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நடுத்தர குடும்பங்களின் எண் ணிக்கை இரண்டு மடங்காகி 163 மில்லிய னாக உயரவிருக்கிறது. ஆசியானின் மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினருக்கு வயது 35க்கும் கீழ். இந்தியாதான் உலகிலேயே ஆக இளையர்களைக்கொண்ட நாடாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவும் தென்கிழக்கு ஆசிய நாடு களும் அதிவேக வளர்ச்சி உடைய இணையப் புழங்கிகளாக இருக்கின்றன. இத்தகைய ஒரு சூழலில் ஆசியான் நாடுகளும் இந்தியா வும் சேர்ந்துசெயல்பட்டால் இரு தரப்பு மக்க ளுக்கும் இன்னும் ஏராளமான பலன்கள் உண்டாகும் என்பதை மறுப்பதற்கில்லை. இந்தியா அங்கம் வகிக்கும் சார்க் எனப் படும் தெற்காசிய வட்டார ஒத்துழைப்பு அமைப்பு ஒடுங்கிப்போய் இருக்கிறது. இத்தகைய ஒரு சூழலில் ‘கிழக்கு நோக்கு வோம்’ என்ற தனது கொள்கையை ‘கிழக்கில் செயல்படுவோம்’ என்ற கொள்கையாக இந்தியா மாற்றிக்கொண்டு இருக்கிறது.

கிழக்கில் அதிக கவனத்தைச் செலுத்தி உருப்படியான செயல்களில் ஈடுபடவேண்டும் என்று முடிவு எடுத்திருக்கும் இந்தியா, சீனா வைப் போல் படைபலப் போக்கை கைகொள் ளாமல் பொருளியல் அணுகுமுறைகளை விவேகமாக கையில் எடுப்பதாகத் தெரிகிறது. இந்திய நிலைமை இப்படி இருக்க, அனைத்து பசிபிக் பங்காளித்துவ உடன்பாட்டிலிருந்து விலகிவிடப்போவதாக அமெரிக்கா சென்ற ஆண்டு அறிவித்துவிட்டதையடுத்து, சிங்கப் பூர் உள்ளிட்ட ஆசியானின் பல நாடுகளும் இரு தரப்பு மற்றும் பல தரப்பு தாராள வர்த்தக உடன்பாடுகளை இதர நாடுகளுடன் செய்து கொள்ள வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கின்றன.

ஆசியான் பக்கம் இந்தியா திரும்பவேண் டும் என்று முதல் முயற்சி எடுத்து அதற்காக கடந்த கால் நூற்றாண்டு காலமாக படாதபாடு பட்டு வந்திருக்கும் சிங்கப்பூர், ஆசியானின் தலைமைத்துவத்தை இந்த ஆண்டு ஏற்கிறது.

ஆசியான்-இந்தியா உறவை இன்னும் பரவலாக்க, இன்னும் ஆழமாக்க, சிங்கப்பூர் உறுதிபூண்டு இருக்கிறது. இது அவசியம் என்று வலியுறுத்தி இருக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், ஆசியான்-இந்தியா உறவு மேலும் வலுப்பட மூன்று யோசனை களை முன்வைத்து இருக்கிறார்.

வர்த்தக முதலீடுகளை மேம்படுத்த ஆசியா னும் இந்தியாவும் முயற்சிகளை இரண்டு மடங்காக்கவேண்டும். உயர்தரமிக்க, பரந்த வட்டார பொருளியல் பங்காளித்துவ உடன் பாடு இடம்பெறவேண்டும். மின்னிலக்க தொடர்பில் அதிக ஒத்துழைப்பு தேவை என் கிறார் திரு லீ.

தரைவழியாகவும் ஆகாயம் வழியாகவும் கடல் மூலமாகவும் இரண்டு தரப்பு மக்களுக் கும் இடையில் அதிக தொடர்புகள் ஏற்பட வேண்டும். இந்தியாவைப் போலவே ஆசி யானும் அறிவார்ந்த நகர் கட்டமைப்பை உரு வாக்க உறுதிபூண்டு இருக்கிறது. இந்த முயற்சியில் இந்தியாவிற்கு உதவ சிங்கப்பூர் தயாராக இருக்கிறது என்றும் திரு லீ தெரி வித்துள்ளார்.

இந்தியா-ஆசியான் உறவு வலுவடைய செம்மையான வாய்ப்புக் கிட்டி இருக்கிறது. இரண்டும் தங்களின் வரலாற்று, கலாசாரத் தொடர்புகளைப் பயன்படுத்தி, சவால்களை சேர்ந்து சமாளித்து, வருங்கால தலைமுறை களுக்கு அருமையான எதிர்காலத்தை ஏற் படுத்தித்தரும் என்று எதிர்பார்ப்போம்.