டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சி யாளர்கள் வசம் உள்ள கிழக்கு கெளட்டா பகுதியில் அரசாங்கப் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியா போர் விமானங்கள் நேற்று முன்தினம் குண்டுகளை வீசித் தாக்கியதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாக கண்காணிப்புக் குழு ஒன்று கூறியது. தாக்குதலில் காயம் அடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் பலர் சுவாசிக்க சிரமப்படுவதால் அவர் களுக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகளுக்கான அந்த கண்காணிப்புக் குழு தெரி வித்துள்ளது.
இதனால் அரசாங்கப் படை குளோரின் வாயுவைப் பயன்படுத்தி மக்கள் மீது தாக்குதல் நடத்தியிருக் கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக எனப்படும் ஒரு மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. சிரியா அதிபர் ஆசாத்தின் ஆதரவுப் படைகள் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதியில் பல வாரங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரு வாரங்களில் மட்டும் 800 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறின. அவர்களில் சுமார் 100 பேர் குழந்தைகள் என்று கூறப்பட்டது. இதற்கு முன்பும் சிரியாவில் அரசாங்கப் படை சொந்த மக்கள் மீதே குளோரின் வாயுவைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை சிரியா அரசாங்கம் மறுத்து வருகிறது. இருப்பினும் சிரியா அரசாங்கம் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பல நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.