You are here

தமிழ் தரும் பேரின்பத்தை எடுத்துரைத்த ‘வெற்றிக் கொடி கட்டு’

வீ. காளிச்சரண்

தமிழ் தரும் பேரின்பத்தை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற தொலை நோக்குடன் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), இம்மாதம் 22ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய உள்ளரங்கில் “வெற்றிக் கொடி கட்டு” எனும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் தன்முனைப்பு மற்றும் இலக்கியச் சொற்பொழி­வுடன், ஜிசிஇ ‘ஓ’ நிலை தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.

தமிழ் மொழி விழா 2018ன் ஓர் அங்கமாக, வளர்தமிழ் இயக்கத்­தின் ஆதரவில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் சென்னையிலுள்ள நீதிபதி ப‌ஷீர் அகமது மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர், முனைவர் பர்வீன் சுல்தானா சிறப்புரையாற்றினார். நகைச்சுவையுடன் அமைந்­திருந்த அவருடைய உரையில் சமுதாய பொறுப்புடைமை, தமிழ் மொழியில் பேசுவதன் முக்கியத்­துவம் போன்ற கருத்துகள் முன் வைக்கப்பட்டன. வாழ்வில் வெற்­றி பெற வேண்டியதற்கு கடைப் பிடிக்க வேண்டிய அம்சங்களையும் முனைவர் சுல்தானா தமது உரையில் எடுத்துரைத்தார்.

ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் விக்னேஷ் மணி, காமராஜ் திருக் குமரன், ராஜேஸ் முத்து ஆகியோர் தமிழ் மொழியின் சிறப்புகளைப் பறைசாற்றும் வண்ணம் ‘மாணவர் அங்கம்’ என்ற நிகழ்ச்சியைப் படைத்தனர். தங்களுடைய படைப்பில் தமிழ் மொழி புழக்கம் குறைவாக இருப்ப­தற்கான காரணங்களை ஆராய்ந்­ த­துடன் தங்களது சிந்தையில் தோன்றிய கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற நியமன உறுப்பினர் குமாரி கே. தனலெட்சுமி மாணவர்­களை ஊக்குவித்துப் பேசினார். சங்கத்தின் தலைவர் முனைவர் மு. அ. காதர், தமது தலைமையுரை­யில் “நாம் அனைவரும் வீட்டில் கட்டாயமாகத் தமிழிலேயே பேச வேண்டும். தமிழ் நூல்களை நிறைய வாசிக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

“இந்த மொழியின் அழகை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டும்” என்ற அவர், “தமிழ் மொழியை நாம் ஒன்றாகச் சேர்ந்து வளர்ப்போம்,” என்றும் நம்பிக்கையுடன் கூறினார். சிங்கப்பூரில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் சமூகத்திற்கும் சேவையாற்றிய தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு மு.ஹரிகிருஷ்ணனுக்கு ‘ஜமாலியன் விருது’ வழங்கப் பட்டது. சிங்கப்பூர் சீனப் பெண்­கள் பள்ளி மாணவி அனுமிதா முரளி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, சங்கத்­தின் துணைத்தலைவர் திரு கலந்­தர் மைதீன் நிகழ்ச்சியை வழி நடத்தினார். சிறந்த நேர மேலாண்மையோடு, உரிய நேரத்­தில் நிகழ்ச்சியைத் துவங்கி, விழா நிறைவுற்றதைப் பலரும் பாராட்டினர்.

 

தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு மு. ஹரிகிருஷ்ணனுக்கு (இடமிருந்து 3வது) ‘ஜமாலியன் விருதை’ வழங்குகிறார் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி கே. தனலட்சுமி (இடமிருந்து 2வது). உடன் இருப்பவர்கள் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் மு. அ. காதர் (இடக்கோடி), சங்கத்தின் செயலாளர் அமானுல்லா (வலமிருந்து 2வது), வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு நசீர் கனி. படம்: ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்