சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பெற்ற வெற்றி செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசியலில் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் சுயேச்சையாகக் களமிறங்கினார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் மதுசூதனனும் திமுக சார்பில் மருது கணேஷும் களமிறக்கப்பட்டனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தினகரன்.
இடைத்தேர்தலில் வாக் காளர்களுக்குப் பெரும் தொகை விநியோகிக்கப் பட்டதாக கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் புகார் எழுப்பின. இந்நிலையில் இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட எம்.எல். ரவி என்பவர் தினகரன் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங்களைச் செவி மடுத்த நீதிபதி தினகரன் பெற்ற வெற்றி செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளார். ரவியின் மனு நீதிமன் றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.