நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு நாளை இந்தியா புறப்படுகிறார். நாளை முதல் இம்மாதம் 29ஆம் தேதி வரை அவர் மும்பையிலும் புதுடெல்லியிலும் இருப்பார். ஆசிய உள்கட்டமைப்புக்கான முதலீட்டு வங்கி ஆளு நர்கள் சபையின் சிங்கப்பூர் ஆளூநர் என்ற முறையில் திரு ஹெங், மும்பையில் நாளையும் செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் ஆளுநர்கள் சபைக்கான 3வது வருடாந்தர கூட்டத்தில் கலந்துகொள்வார்.
'உள்கட்டமைப்புக்கான நிதியைத் திரட்டுதல்: புத்தாக்கமும் ஒத்துழைப்பும்' எனும் கருப்பொருளை மையமாகக் கொண்ட கூட்டத்தில் ஆசிய உள் கட்டமைப்புக்கான முதலீட்டு வங்கி ஆளுநர்கள் இந்த வட்டாரத்தில் உள்கட்டமைப்பை மேம் படுத்துவதற்கு தனியார் முதலீட்டை திரட்டும் வாய்ப்புகள் பற்றி ஆராய்வார்கள். மேலும் முக்கியமான உள்கட்டமைப்பு தேவைகளுக்கு புத்தாக்க நிதியைப் பயன்படுத்தும் வழிகளை அடையாளம் காணவும் ஆளுநர்கள் முற்படுவார்கள். பின்னர் புதுடெல்லிக்குச் செல்லும் அமைச்சர் ஹெங், அங்கு தெற்காசிய ஆய்வுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள சிங்கப்பூர் கருத்தரங்கு 2018ல் பங்கேற்பார்.
பயணத்தின் போது திரு ஹெங், இந்தியாவின் மூத்த அரசாங்க அதி காரிகளையும் வர்த்தகத் தலைவர்களையும் சந்திப்பார். அமைச்சர் ஹெங்குடன் நிதி அமைச்சு, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் அதிகாரிகள் உடன் செல்கின்றனர்.