'களவாணி' படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு அதே படத்தின் இரண்டாம் பாகத்தை பரபரப்பாக இயக்கி வருகிறார் இயக்குநர் சற்குணம். முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்களை வைத்தே இதையும் எடுத்து வருகிறார். சூரி மட்டும் இரண்டாம் பாகத்தில் தலைகாட்டவில்லை. அவருக்குப் பதிலாக ஆர்ஜே பாலாஜி நடிக்கிறார். விமல், - ஓவியா ஜோடி சேர்ந்திருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஜோடியை வைத்து அண்மையில் படமாக்கிய 'ஒட்டாரம் பண்ணாதே...' பாடல் மிகவும் சிறப்பாக வந்திருப்பதாக படக்குழுவினர் சொல்கிறார்கள்.
இந்தப் படத்துக்காக இடிந்துபோன பழைய வீடு ஒன்றை மிக தத்ரூபமாக கலை இயக்குநர் குணசேகரன் அமைத்திருந்தாராம். தஞ்சாவூர் பக்கத்தில் ஒரு கிராமத்தில் அமைக்கப்பட்ட இந்த வீட்டைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்களாம். "விமல் மிக நேர்த்தியான நடிகராக உருவெடுத்துள்ளார். ஓவியாவுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்திருப்பது எங்களுக்குப் பலமாக உள்ளது. படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் வசப்படுத்தும்," என்கிறார் இயக்குநர் சற்குணம்.