சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற பேரில் 10 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துவாசுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில், படகு வழியாகச் சென்று கொண்டிருந்த ஆடவர்களைக் கரையோரக் காவல் படையினர் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை சுமார் 7.30 மணிக்கு, சிங்கப்பூரை நோக்கி விரைவாகச் சென்று கொண்டிருந்த அந்தப் படகைக் கரையோரக் காவல் படை அதிகாரிகள் கண்டனர். அந்த ஆடவர்கள் 20 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப் பட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்டெடுக்கப்பட்ட துவாஸ் நிலப்பகுதியின் கரைக்கு அருகே அந்தப் படகு சென்று, சிங்கப்பூருக்கு சொந்தமான நீர்ப்பகுதியைவிட்டுச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. ஜூரோங் போலிஸ் பிரிவு, குர்க்கா படை, சிறப்புச் செயலாக்கப்படை ஆகியவற்றின் துணையுடன் அந்த பத்து நபர்கள் பிடிக்கப்பட்டனர். கள்ளத்தனமாக சிங்கப்பூருக்குள் நுழையும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு மாதம் வரையிலான சிறையும் குறைந்தது மூன்று பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்படும்.