ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாலி விமான நிலையம் எரிமலைச் சாம்பல் பரவியதன் காரணமாக ஏறக்குறைய 12 மணி நேரம் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையம் மூடப்பட்டதால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தோனீசியாவின் மிகப் புகழ் பெற்ற சுற்றுலா தளமான பாலியில் இருக்கும் விமான நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை அதி காலை 3 மணிக்கு மூடப்பட்டது.
அகுங் என்ற எரிமலையின் சீற்றமே அதற்கு காரணம். விமான நிலையம் நேற்று பிற் பகல் 2.30 மணிக்குத் திறக்கப் பட்டதாக அந்த விமான நிலை யத்தை நிர்வகிக்கும் நிறுவனத்தின் செயலாளரான திரு இஸ்ரவாடி தெரிவித்தார். எரிமலைச் சாம்பல் காரணமாக பாதிக்கப்படாத மாற்றுத் தடங்கள் வழியாக விமானங்கள் பறந்து செல்ல முடியும் என்பதால் விமான நிலையம் திறக்கப்பட்டது என்று திரு இஸ்ரவாடி தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
பாலியில் எரிமலை குமுறுவதால் விமான நிலையம் மூடப்பட்டு 12 மணி நேரத்துக்குப் பிறகு திறக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி