சென்னை: போலி கடப்பிதழ் (பாஸ்போர்ட்) விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள், குடி நுழைவு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது போலிஸ் விசாரணையில் தெரியவந்துள் ளது. இது தொடர்பாக ஏராளமான முக்கியப் புள்ளிகள் கைதாகாலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் போலி கடப்பிதழ் தயாரித்து விற்பனை செய்ததாக வேளச்சேரியை சேர்ந்த வீரக்குமார், அவரது தம்பி பாலசுப்பிரமணியன், இலங்கைத் தமிழர்கள் 6 பேர் உட்பட 11 பேரை மத்திய குற்றப் பிரிவு போலிஸ் சென்ற மாதம் 24ஆம் தேதி கைது செய்தது.
கைதானவர்களிடம் இருந்து 80 இந்திய போலி கடப்பிதழ்கள், 12 இலங்கை போலி கடப்பிதழ்கள் இவற்றைத் தயாரிக்க பயன் படுத்திய பொருட்கள் எல்லாம் பறிமுதலாயின. ஐரோப்பிய நாடுகள், கனடா, இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ளவர்களுக்கு இவர்கள் கடப்பிதழ் தயாரித்துக்கொடுத்து பெரும் பணம் பெற்றனர் என்பது விசாரணையில் தெரியவந்ததாக மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் வெளிநாட்டில் படப் பிடிப்புக்குச் செல்கிறோம் என்ற பெயரில் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்டவர்களை அழைத்துச் சென்று அவர்களை அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளனர். கடப்பிதழ்களை வாங்கி, பல ஆண்டுகள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ஆட்களிடம் ரூ.25,000 வரை பணம் கொடுத்து அவற்றை வாங்கி, அதில் புகைப் படத்தை மட்டும் மாற்றி போலி கடப்பிதழ் தயாரிக்கின்றனர். போலி கடப்பிதழ் தயாரித்துக் கொடுக்க ரூ.50,000 முதல் ரூ.100,000 வரையும் விசாவுக்கு ரூ.200,000 முதல் ரூ.400,000 வரையும் வசூல் செய்துள்ளனர். இப்படி போலியாக கடப்பிதழ், குடிநுழைவு அனுமதி பெற்றவர்கள் பிரச்சினை இல்லாமல் செல்ல வேண்டும் என்பதற்காக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரியையும் பழக்கப்படுத்தி வைத்துள்ளனர்.