சென்னை: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்புத் தெரிவித்து உள்ளது. நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத் தில் தேர்தல் நடத்தவேண்டும் என்ற கருத்து அண்மைக் காலங் களில் வலுப்பெற்று வருகிறது. பிரதமர் மோடியின் விருப்ப மும் அதுதான். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற முழக்கத்தை மோடி பயன்படுத்தி வருகிறார். இவ்வாறு ஒரே தேர்தலாக நடத் துவதன் மூலம் நேரமும் பணமும் மிச்சமாகும் என்ற கருத்து நிலவுகிறது. இதுதொடர்பாக தேசிய சட்ட ஆணையம் நாளை மறுதினம் புதுடெல்லியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்துகிறது. நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் இதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதிமுக சார்பாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் தமிழக சட்ட அமைச்சர் சண்முகமும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுக தேசிய சட்ட ஆணை யத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. "தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை அதன் ஆட்சிக் காலம் பூர்த்தியாகும் முன்பே கலைப் பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதனை தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறார்," என்று அதிமுக அந்தக் கடிதத்தில் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.