பேங்காக்: சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற ஒரு படகு தாய்லாந்தில் புக்கெட் தீவுக் கருகே கடலில் மூழ்கியதில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயரக்கூடும் என்று அஞ்சப் படுவதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்படகில் சென்ற மொத்தம் 105 பேரில் 49 பேர் காப்பாற்றப் பட்டுள்ளனர். விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. எஞ்சிய 15 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் யாரேனும் விபத்து நிகழ்ந்த மூன்று நாட்களுக்குப் பிறகும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தான் அஞ்சுவதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். படகு மூழ்கிய இடத்தில் தேடும் பணி தீ வி ர ப் ப டு த் த ப் ப ட் டு ள் ள தா க தாய்லாந்து சுற்றுலாத் துறை அமைச்சர் வீராசாக் கோவ்சுரட் கூறினார்.
மோசமான பருவநிலை தொடர்பாக எச்சரிக்கை விடுக் கப்பட்டிருந்தும் அதனை அப்படகு ஓட்டுநர் புறக்கணித்தது தொடர் பில் விசாரணை நடத்துமாறு ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உத்தரவிட்டுள்ளார். ஃபோனிக்ஸ் எனும் பயணிகள் படகு வியாழக்கிழமை கொந்தளிப்பு மிக்க கடல் அலையில் சிக்கி மூழ்கியது. அப்படகில் சென்ற வர்களில் 92 பேர் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள். அப்படகு விபத்து தொடர்பில் படகு கேப்டன் மற்றும் படகு உரிமையாளர் மீது குற்றம் சாட்டப் படவிருப்பதாக தாய்லாந்து போலிசார் தெரிவித்துள்ளனர். கவனக்குறைவாக இருந்தது தொடர்பில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்று தெரிகிறது.
புக்கெட் கடல் பகுதியில் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர். படம்: ஏஎஃப்பி