ஹாங்காங்: மலேசியாவில் 1எம்டிபி நிதி விவகாரம் தொடர்பில் தேடப்படும் தொழில் அதிபர் ஜோ லோ சீனாவில் இல்லை என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1எம்டிபி நிதி முறைகேடு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பே மலேசியாவிலிருந்து தப்பிச்சென்ற ஜோ லோ ஹாங்காங்கில் இருப்பதாக தகவல் வெளியானது. அவரைக் கைது செய்ய மலேசியப் போலிசார் ஹாங்காங் சென்றபோது அவர் அங்கு இல்லை. அங்கிருந்து அவர் மக்காவ் நகருக்கு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் ஜோ லோ மக்காவிலிருந்து கார் அல்லது தனியார் விமானம் மூலம் சீனாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஜோ லோ ஜூலை 9ஆம் தேதி மக்காவிலிருந்து வெளியேறிவிட்டதாக மக்காவ் போலிசாரிடமிருந்து தகவல் கிடைத்தது என்று மலேசிய போலிஸ் படை தலைவர் முகமட் ஃபுஸி ஹருன் கூறினார்.