நாட்டிங்ஹம்: குல்தீப் யாதவ் இங்கி லாந்து அணியின் ஆறு விக் கெட்டுகளைச் சாய்க்க, அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா நூறு ஓட்டங்களை விளாச, முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடை யிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நேற்று முன்தினம் தொடங் கியது. வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கௌல் இந்திய அணி யின் அறிமுக வீரராகக் களமிறங் கினார்.
முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராயும் ஜானி பேர்ஸ்டோவும் ஆளுக்கு 38 ஓட் டங்களை விளாசி, அருமையான தொடக்கம் கொடுத்தனர். ஆனால், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பந்து வீச வந்ததும் இங்கிலாந்தின் சரிவும் ஆரம்பமானது. குல்தீப் பத்து ஓவர்களை வீசி ஒரு பவுண்டரிகூட அடிக்க விடா மல், 25 ஓட்டங்களை மட்டும் விட்டுத்தந்து ஆறு விக்கெட்டு களை அள்ளினார். இறுதியில், இங்கிலாந்து அணி 49.5 ஓவர் களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களை எடுத்தது.
இதே அரங்கில்தான் கடந்த மாதம் 19ஆம் தேதி ஆஸ்திரேலியா விற்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி 481 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து பந்தடித்த இந்திய அணிக்கு அதிரடித் தொடக்கம் தந்தார் ஷிகர் தவான். அவர் 27 பந்துகளில் 40 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார். அதன்பின் ரோகித் -கோஹ்லி இணை இங்கிலாந்து வீரர்களின் பந்துகளில் எளிதாக ஓட்டம் சேர்த்தனர். கோஹ்லி 75 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார். ரோகித் 114 பந்துகளில் 137 ஓட்டங்களை விளாசினார். இதனால், 40.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டு களை மட்டும் பறிகொடுத்து, இந்தியா இலக்கை எட்டியது.