தமிழில் இப்போதைக்கு அதிகப் படங்களைக் கைவசம் வைத்துள்ள நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். கடின உழைப்பு இருந்தால் கைத்தட்டல் கிடைக்கும். அந்தக் கைத்தட்டலே எனக்குப் போதுமானது என்கிறார். இவர் 'துருவ நட்சத்திரம்', 'சாமி - 2', 'இது வேதாளம் சொல்லும் கதை', 'வட சென்னை', 'செக்கச் சிவந்த வானம்', 'இடம் பொருள் ஏவல்' போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். படத்தில் முக்கிய நாயகியாகத்தான் நடிப்பேன். பெரிய நாயகர்களுடன்தான் நடிப்பேன் என்றெல்லாம் அடம் பிடிக்காமல் கதையும் வேடமும் நன்றாக இருந்தால் உடனடியாக சம்மதம் தெரிவித்து விடுகிறார். 'சாமி- 2' படத்தில் விக்ரமுடன் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் ஐஸ்வர்யா.
இயல்பாக நடிப்பது மட்டும் அல்லாமல் இயல்பாகவே பேசுபவர் நடிகை ஐஸ்வர்யா. ஒரு பேட்டியில் "என் முதல் படத்தில் என்னைப் பார்க்கும்போது ரொம்ப கேவலமாக இருந்தேன். போகப் போகத்தான் திரையில் என்னை நானே வளர்த்துக்கொள்வது எப்படி என்று தெரிந்துகொண்டேன். "ஆனால் இப்போது வருகிற கதாநாயகிகள் வரும்போதே உடை அலங்காரம், திறமை, அறிவு என்று அனைத்தும் தெரிந்து வருகிறார்கள். கடின உழைப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருக்கவேண்டும். இதெல்லாம் இருந்தாலே போதும். யார் வேண்டு மானாலும் நல்ல நிலைமைக்கு வரலாம்," என்று கூறினார். 'சாமி 2' படத்தில் ஐயர் வீட்டு மாமியாக திரிஷா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.