சரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. 'பாகுபலி' வெற்றிக்குப் பிறகு இந்த வகையான படங்களின் பக்கம் தயாரிப்பாளர்களின் பார்வை திரும்பி இருக்கிறது. ராமாயணத்தைப் படமாக எடுக்க இருக்கிறார் அனிமேஷன் படத்துக்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் பார்கவ். படத்தைப் பற்றி பார்கவ் கூறுகையில், "ராமாயணக் கதையை ஏற்கெனவே நிறைய பேர் படமாக்கி உள்ளனர். நான் அதில் வரும் ராவணன் சகோதரி சூர்ப்பனகை கதாபாத்திரத்தை மட்டும் பிரதானமாக வைத்துப் புதிய படத்தை எடுக்கிறேன். இளவரசியாக வாழ்ந்த சூர்ப்பனகையின் வாழ்க்கை, ராமன் மீதான ஆசை, அதனால் சீதை கடத்தப்பட்ட சம்பவம், ராமன்=ராவண யுத்தம் போன்றவை படத்தில் முக்கிய அம்சங்களாக இருக்கும். சூர்ப்பனகைக் கதாபாத்திரம் அழகாக காட்டப்படும்" என்றார்.
இந்தப் படத்தில் சூர்ப்பனகை வேடத்துக்கு காஜல் அகர்வாலை சந்தித்துக் கதை சொல்லி உள்ளனர். அவருக்கும் கதைப் பிடித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா உள்ளிட்டோர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். காஜல் அகர்வாலுக்கு இன்னும் அதுபோல் கதைகள் அமையவில்லை. அதனால் தனக்கு முக்கியத்துவம் தரப்படும் இந்தக் கதையில் சூர்ப்பனகையாக நடிக்க அவர் சம்மதித்து விட்டதாகக் கூறப்படுகிறது. காஜல் அகர்வால் தற்போது 'குயின்' இந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பான 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடித்து வருகிறார்.
காஜல் அகர்வாலின் தங்கைக்குத் திருமணம் ஆகி குழந்தை பிறந்த நிலையில் தொடர்ந்து படங்களில் பிஸியாக இருந்து வரும் காஜல், திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்க முடியாமலிருக்கிறார். இந்த ஆண்டு 3 படங்களில் நடிக்கும் அவர், அடுத்த ஆண்டிற்கும் 3 படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். அத்துடன் இந்த சரித்திரப் படமும் சேர்ந்து கொண்டதால் திருமணம் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குத் தள்ளி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.