லண்டன்: விம்பிள்டன் பொது விருது டென்னிஸ் வரலாற்றிலேயே ஆக அதிக நேரம் நடந்த அரையிறுதிப் போட்டியில் வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார் தென்னாப்பிரிக்க வீரரான கெவின் ஆண்டர்சன். அதோடு, 97 ஆண்டுகளுக்குப் பிறகு விம்பிள்டன் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். காலிறுதியில் ஃபெடரரை வீழ்த்திய 32 வயது ஆண்டர்சன், அரையிறுதியில் அமெரிக்காவின் ஜான் ஐஸ்னரை எதிர்கொண்டார். ''
மொத்தம் ஆறு மணி நேரம் முப்பத்தைந்து நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-6, 6-7, 6-7, 6-4, 26-24 என்ற செட் கணக்கில் ஆண்டர்சன் வெற்றி பெற்றார். குறிப்பாக, கடைசி செட் மட்டும் இரண்டு மணி நேரம் 50 நிமிடங்கள் நீடித்தது. டென்னிஸ் வரலாற்றில் ஆக அதிக நேரம் நடந்த மூன்றாவது ஆட்டமும் இதுதான். 2010 விம்பிள்டன் தொடரில் ஐஸ்னரும் பிரான்சின் நிக்கலஸ் மகுத்தும் மோதிய முதல் சுற்று ஆட்டம் 11 மணி நேரம் ஐந்து நிமிடங்களுக்கு நீடித்தது. அதில் ஐந்தாவது செட்டை 70-68 எனக் கைப்பற்றி, ஆட்டத்தை வென்றார் ஐஸ்னர். 2015 டேவிஸ் கிண்ணத் தொடரில் லியானர்டோ மேயர்=ஜோவோ சௌசா மோதிய ஆட்டம் ஆறு மணி நேரம் 43 நிமிடங்கள் நீடித்தது.