ஆயர் ராஜா விரைவுச்சாலையில் கார் ஒன்று தலைக்கீழாகப் புரண்டதில் நால்வர் காயமடைந்தனர். ஜூரோங் டவுன் ஹால் சாலை முடிவின் அருகே துவாஸை நோக்கிச் செல்லும் விரைவுச்சாலை பகுதியில் நடந்த இவ்விபத்து குறித்த தகவல் நேற்று காலை ஏழு மணிக்கு போலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. காரில் இருந்த மூன்று ஆடவர்களும் ஒரு மாதுவும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
19 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட அந்த நால்வருக்கும் சிறு காயங்களே ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. கார் புரள்வதற்குமுன் சறுக்கியதாகவும் இவ்விபத்தில் வேறு எந்த வாகனமும் சம்பந்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. விபத்தின் காரணமாக விரைவுச்சாலையில் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. விபத்து குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது.