லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது (பிரெக்ஸிட்) தொடர்பில் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே வகுத்த செயல் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவு கிடைத்துள்ளது. குறுகிய வாக்கு வித்தியாசத்தில் திருவாட்டி மே தோல்வியை தவிர்த்திருக்கிறார். அவரது செயல் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 307 உறுப்பினர்கள் அத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தனர்.
301 பேர் அத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். வாக்களிப்பு நடத்தப்படுவதற்கு முன்பு உறுப்பினர்களிடம் பேசிய திருவாட்டி மே, தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனது பிரெக்ஸிட் திட்டத்திற்கு வாக்களிக்க வில்லை என்றால் பிரிட்டனில் மீண்டும் தேர்தலை நடத்த தான் எண்ணியிருப்பதாக மிரட்டல் விடுத்திருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு ஐரோப்பிய நாடுகளுடனான பிரிட்டன் வர்த்தக உறவு குறித்த அம்சங்கள் அந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.