கசிந்துகொண்டிருந்த தண்ணீர்க் குழாயைப் பழுதுபார்க்கத் தவறிய நிக்கொன் கார்டன்ஸ் கூட்டுரிமை வீட்டு நிர்வாகக் குழுவிற்கு $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மூன்று எச்சரிக்கை அறிவிப்புகளுக்குப் பிறகும் நான்கு நாட்களுக்கு நீர் கசிவை நிறுத்தத் தவறியதால் பொதுப் பயனீட்டுக் கழகம் அபராதத்தை விதித்ததாக நேற்று தெரிவித்தது. நீர் கசிந்ததில் 4,000 கன மீட்டர் தண்ணீர் வீணாகியது என்றும் இந்த அளவு ஒன்றரை ஒலிம்பிக்- நீச்சல் குளத்தை நிரப்பும் நீர் அளவுக்குச் சமம் என்றும் கூறப்பட்டது.
தண்ணீர்க் கசிவு குறித்து ஜூன் 28 அன்று பொது மக்களிடமிருந்து கிடைத்த புகாரைத் தொடர்ந்து உடனே நிலத்தடி சேவை குழாயிலிருந்து வந்த கசிவை நிர்வாகம் சரிசெய்ய வேண்டும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியதைப் பொருட்படுத்தாமல் கட்டட நிர்வாகம் ஜூலை 2ஆம் தேதி அன்றுதான் நீர்க் கசிவை நிறுத்தியது. இக்குற் றத்திற்காக நிர்வாகத்திற்கு $10,000 வரை அபராதமும் ஓராண்டு காலம் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.