துவாஸ் சோதனைச்சாவடி வழியாக 42 வயது மலேசிய மாது கள்ள சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற சம்பவத்தைத் தொடர்ந்து மொத்தம் 227 அட்டைப்பெட்டிகளிலும் 1,366 பாக்கெட்டுகளிலும் வரி செலுத்தாத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. திங்கட்கிழமை பகல் 1.25 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் சிகரெட்டுகள் மலேசியாவில் பதிவான கார் ஒன்றின் வெவ்வேறு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டதாக குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தன் ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
காரின் மாற்றம் செய்யப்பட்ட முகப்புப் பகுதி, முன் பம்ப்பர், பின் ஃபெண்டர் முதலிய இடங்களில் சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இச்சம்பவம் தொடர்பான விசாரணை சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்ற வெள்ளிக்கிழமை இதே முறையில் மலேசிய காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த $19,200 மதிப்புடைய வரி செலுத்தாத சிகரெட்டுகளை ஆணையம் கைப்பற்றியது.