புதுடெல்லி: தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி பிறப்பித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வை 24,000 மாண வர்கள் எழுதினார்கள். இதில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்புக் குளறுபடியால் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்தன.
நீட் தேர்வின்போது தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் பிழையாக இருந்ததால் கருணை மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப் பினர் டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்து இருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி. செல்வம், ஏ.எம். பஷீர் அகமது ஆகியோர் கடந்த 10ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், 'மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட 49 கேள்விகள் தவறாக இருந்ததால் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த கருணை மதிப் பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு புதிய தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டது.