தைவானின் தலைநகர் தைப்பேயிலிருந்து சிங்கப்பூரை நோக்கி புறப்பட்டுக்கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவையில் இரண்டு நாட்களுக்கு முன்னர், 77 வயது சிங்கப்பூர் மாது ஒருவர் மாண்டார். எஸ்கியூ877ல் அந்தப் பயணி மாண்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பேராளர் உறுதி செய்தார். "தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்காக எங்களால் மேற்கொண்டு எந்தத் தகவலையும் வெளியிட முடியவில்லை," என்று அந்தப் பேராளர் கூறினார்.
சாங்கி விமான நிலையத்தில், இயற்கைக்கு மாறான மரணம் குறித்த தகவல், இரவு 7.02 மணிக்கு வந்ததாகப் போலிசார் தெரிவித்தனர். அசைவின்றிக் காணப்பட்ட அந்த மூதாட்டி மாண்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர். சக்கர நாற்காலியில் இருந்த அந்த மூதாட்டிக்கு பல்வேறு மருத்துவச் சிக்கல்கள் இருந்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது. தைவானைச் சேர்ந்த தனது மகளுடன் அந்த மாது விமான பயணத்தில் இருந்தார்.