தேனி: போதைப்பொருட்களைக் கடத்திய குற்றத்தின் பேரில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தேனி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் இரவு தேவதானப்பட்டி சாலையில் போலிசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்திச் சோதனையிட்டனர். இதில் அந்தக் காரில் தடை செய்யப்பட்ட பல்வேறு போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த இரு ஆடவர்கள் கைதாகினர்.
அவர்களில் 22 வயதான அஜய் என்பவர் கல்லூரியில் படிப்பது தெரியவந்தது. இருவரும் பல ஊர்களுக்குக் காரில் சென்று போதைப் பொருட்களை விற்று வந்தது விசாரணையில் அம்பலமானது. இதற்கிடையே காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களைப் போலிசார் பறிமுதல் செய்தனர். கைதான இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.