கோத்தா கினாபாலு : மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், சாபா மாநிலத்திலுள்ள மரம் தொடர்பான நிறுவனங்களின் அலுவலகங்களின் மீது சோதனை நடத்தியுள்ளது. தேசிய முன்னணி தலைமையிலான முன்னைய அரசாங்கம் அந்நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள ஒப்பந்தங்களை விசாரிக்க அந்த ஆணையம் முனைகிறது. சன்டகான், தவாவ் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள மூன்று நிறுவனங்களின் மீது ஒரே நேரத்தில் ஆணையம் சோதனைகளை நடத்தியதாக 'தி ஸ்டார்' நாளிதழ் தெரிவித்தது.
சன்டகானிலுள்ள சாபா வனத்துறை தலைமையகம் மீது அதிகாரிகள் நேற்று தேடுதலை நடத்தினர். சாபாவின் புதிய முதலமைச்சர் முகமது ஷஃபி அப்டல், மரக்கட்டைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ள வேளையில் இந்தச் சோதனைகள் நடந்தன. ஒரு கட்சியின் ஆதிக்கத்தால் பத்து ஆண்டுகளுக்கு மேல் நிறுவனங்கள் கூட்டாகச் செயல்பட்டு வந்ததாகவும் அதனால் மக்களுக்கும் மாநில பொருளியலுக்குமான ஆதாயம் மிகக் குறைவு என்று திரு ஷஃபி தெரிவித்தார்.