சென்னை: பிரியாணிக் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து சென்னையைச் சேர்ந்த திமுக தொண்ட ரணி நிர்வாகி யுவராஜைக் கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக பொதுச்செயலர் அன்பழகன் அறிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பிரியாணிக் கடைக்குத் தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார் யுவராஜ்.
இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் பிரியாணி தீர்ந்துவிட்டதாகக் கடை மேலாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த யுவராஜும் அவரது ஆட்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, பிரகாஷ் உள்ளிட்ட பிரியாணி கடை ஊழியர்களைச் சரமாரியாகத் தாக்கி உள்ளனர். இது கடையில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்புக் காமராவில் பதிவானது.
யுவராஜ் உள்ளிட்டோர் மீது கடை மேலாளர் பிரகாஷ் போலிசில் புகார் அளித்துள்ள நிலையில் இந்தக் காணொளி பதிவு வெளியாகி உள்ளது. இதையடுத்து கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் பிரகாஷ் உள்ளிட்ட இருவரைத் திமுகவில் இருந்து நீக்குவதாக அன்பழகன் தெரிவித்துள்ளார்.