பொழுதுக்கும் அழுது வடியும் பாத்திரங்களிலும் மரத்தைச் சுற்றிச் சுற்றி கவர்ச்சிப் பொம்மையாக வந்து செல்லவும் பிடிக்காது. அதற்கென்றே அதிக அளவில் நடிகைகள் உள்ளனர். ஒருசில காட்சிகளில் நடித்தாலும் ரசிகர்களின் நினைவில் நிற்கும் காட்சிகளில் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை. அப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்கு மட்டுமே இப்போது எல்லாம் சம்மதித்து வருகிறேன் என்கிறார் டாப்சி. 'ஆடுகளம்' படத்தில் அறிமுகமானபோது பொம்மை போல் வந்து சென்ற வெண்ணிற தேவதை டாப்சி, இப்போது பாலிவுட்டில் பரபரப்பான நடிகையாக வலம் வருகிறார். அதிலும் 'பிங்க்' படத்தில் நடித்தபின் அவர் முன்னணி நடிகையாகிவிட்டார்.
இந்தியில் பெரும்பாலான நடிகையர் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டுவதால் குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு போதுமான நடிகர்கள் இல்லாமல் திண்டாட்ட மாகிவிட்டது. இந்தக் குறையைத் தற்போது டாப்சிதான் போக்கி வருகிறார். இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கைக் கதை படத்தில் அவரது வேடத்தில் நடிப்பதற்கு டாப்சி தேர்வாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்துச் சாதனை நிகழ்த்தியவர் மிதாலி ராஜ். இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 6,000 ஓட்டங்களைக் குவித்துள்ளார். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் இப்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். மிதாலி ராஜின் வாழ்க்கை திரைப்படமாகத் தயாராகிறது. இதற்கு மிதாலி ராஜும் அனுமதி அளித்துள்ளார். சிறு வயது முதல் புகழ்பெற்ற கிரிக்கெட் வீராங்கனையாக உயர்ந்தது வரை உள்ள அவரது வாழ்க்கைச் சம்பவங்களைப் படத்தில் காட்சிப்படுத்து கின்றனர்.