பேங்காக்: தாய்லாந்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையினால் அணைகளில் நீர் நிரம்பி வழிகின்றது. இதனால் வெள்ளம் ஏற்படக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையில் தாய்லாந்தின் மேற்குப் பகுதிகளில் உள்ள மக்கள் உடனே உயரமான இடங்களுக்கு மாறக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பெட்சபூரி, காஞ்சனாபூரி, பிரச்சுவப் கிரி கான் ஆகிய மாகாணங்கள் அருகிலுள்ள பெரிய அணைகள் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணத்தால் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்ற எச்சரிக்கை நேற்று முன்தினம் விடுக்கப்பட்டது.
அடுத்து வரும் நாட்களில் கூடுதல் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் வன்சாய் சக்குடொம்சாய் எச்சரித்துள்ளார். குறிப்பாக ஆற்றோரத்தில் வாழும் மக்கள் ஆற்றின் நீர்நிலையைக் கண்காணித்து வருமாறும் உடைமைகளை உயரமான இடத்துக்கு கொண்டு செல்லும்படியும் அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.