அரசியல் என்பது இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் அல்ல என்கிறார் இளம் நாயகி பிரியா பவானி சங்கர் (படம்). நடிகர்கள் ரஜினியும் கமலும் மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் அவர்களை நம்பவேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரஜினி, கமல் இருவரும் தங்கள் அரசியல் பிரவேசத்தை அறிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின் றனர். இந்நிலையில் அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் குறித்துத் திரையுலகைச் சேர்ந்த சக கலைஞர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரியாவும் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். ரஜினி, கமல் ஆகிய இருவரையுமே இவருக்கு ரொம்பப் பிடிக்கு மாம். இருவரும் நடிக்கும் படங்கள் வெளியீடு காணும்போது முதல் நாளே பார்த்துவிட வேண்டும் எனத் துடிப்பாராம். அதற்காக அரசியலில் அவர்களைக் கண் மூடித்தனமாக ஆதரிக்க முடியாது என்பது பிரியாவின் நிலைப்பாடு. "ரஜினி, கமல் இருவருமே தேர்தலில் வெற்றி பெற்றால் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்யப் போகிறார்கள். அப்போதுதான் அவர்களைப் பற்றி எடைபோட முடியும். "என்னைப் பொறுத்தவரை அரசியல் என்று வந்த பிறகு ஒரு சாதாரண குடிமகளாகத்தான் முடிவெடுப்பேன். நான் அவர்களது ரசிகை என்பதற்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. "நாம் எப்போதுமே நடிகர்களிடம் இருந்து சில விஷயங்களை எதிர்பார்க்கிறோம். திரையில் பேசும் வசனங்களைக் கதாநாயகர்களின் நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடுகிறோம். அது சரியல்ல.
"எல்லோருக்குமே அரசியலில் தொடர்பு இருக்கிறது. நமது சமூக வலைத்தள பக்கங்களைப் பார்த்தாலே நாம் பேசுவதுதான் அரசியல் என்பது சுலபத்தில் புரிந்துவிடும்," என்கிறார் பிரியா.
இதற்கிடையே ரஜினி, கமல் ஆகிய இருவருக்குமே தமது ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ளார் 'அட்டகத்தி' தினேஷ்.
சிறு வயதில் இருந்தே இவருக்கு அரசியலில் ஆர்வம் உண்டாம். அரசியலில் ஈடுபடும் எண்ணமும் உள்ளதாம். "நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடினால் துப்பாக்கியால் சுடுகிறார்கள். அந்த ஆதங்கம்தான் அரசியலில் ஈடுபடக் காரணம். மக்களுக்கு வழி காட்டுவதற்கு சரியான தலைவர்கள் இங்கே இல்லை. இங்கு இருப்பவர்கள் கேள்வி கேட்கக்கூட மறுக்கின்றனர்.
"நான் கமல், ரஜினியை ஆதரிக்க மாட்டேன். ஆனால் டிடிவி தினகரனை ஆதரிப்பேன். அவர் நன்றாகச் செயல்படுகிறார். எனவே அவரை ஆதரிப்பதில் எனக்குத் தயக்கம் ஏதுமில்லை," என்று கூறும் தினேஷ் நடிப்பில் அடுத்து 'அண்ணனுக்கு ஜே' படம் வெளியாக உள்ளது.