மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது இன்று மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று குற்றச்சாட்டுகளும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்துடன் தொடர்பானது என்று நம்பப்படுகிறது. திரு நஜிப்பிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று மாலை விசாரணை நடத்தினர். ஆணையத்தின் தலைமையகத்தை திரு நஜிப் நேற்று மாலை சுமார் 5 மணிக்கு அடைந்தார் என்றும் அவரிடம் அதிகாரிகள் ஏறத்தாழ 45 நிமிடங்களுக்கு விசாரணை நடத்தினர் என்றும் மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
விசாரணைக்காக தலைமையகத்துக்குள் நுழைந்தபோதும் விசாரணைக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பிச் சென்றபோதும் திரு நஜிப் செய்தியாளர்களிடம் பேசவில்லை. தாம் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று திரு நஜிப் கூறி வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த மலேசியப் பொதுத் தேர்தலில் திரு நஜிப் தலைமையிலான தேசிய முன்னணி தோல்வி அடைந்தது.