சமந்தா நடித்து முடித் துள்ள இரு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன. எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் தேதி 'யு டர்ன்', 'சீமராஜா' ஆகிய இரு படங்களும் வெளியாக இருப்பது தமக்குக் கூடுதல் உற்சாகம் அளித்திருப்பதாகச் சொல்கிறார் சமந்தா. ஒரே சமயத்தில் இரு படங்கள் வெளியாவது தமக்கு ராசியாக உள்ளது என்றும் சொல்கிறார். "யு டர்ன்' படத்தில் செய்தியாளராக நடித்துள்ளேன்.
இது ஒரு கொலைச் சம்பவத்தின் பின்னணியை விவரிக்கும் படம். 'சீமராஜா' கிராமத்துப் படமாக உருவாகி உள்ளது. இரண்டையுமே ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்," என்கிறார் சமந்தா. இவர் நடித்து ஒரே நாளில் வெளியான 'இரும்புத்திரை', 'நடிகையர் திலகம்' ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. இந்நிலையில் மீண்டும் சமந்தாவின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இவையும் வெற்றி பெறும் என அவர் நம்புகிறாராம். இதற்கிடையே தெலுங்கில் வாய்ப்புகள் அதிகரிப்பதால் தமிழில் சில வாய்ப்புகளை சமந்தா நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதை சமந்தா தரப்பு உறுதி செய்யவில்லை. எனினும் இளம் நாயகர்களின் படங்களில் மட்டுமே இனி நடிப்பது என அவர் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கேற்ப கதை கேட்டு வருவதாகவும் தெரிகிறது.